தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து...! குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கோரிக்கை - மு.க. ஸ்டாலின்

சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும் வரை காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.

மு.க. ஸ்டாலின், திமுக தலைவர்

By

Published : Aug 5, 2019, 3:05 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் மக்களுக்கும் சிறப்புச் சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 370 நாடாளுமன்றத்தில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அரசியலமைப்புச் சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத் தலைவரின் அறிவிப்பு மூலம் ரத்து செய்திருப்பதும், லடாக், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளை பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்திருப்பதையும் கண்டு, இந்தியத் திருநாடு எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்ற மனக் கவலையும், அதிர்ச்சியும் ஏற்படுவதாகக் கூறியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிலும், இந்திய நாட்டின் இறையாண்மையிலும் திமுக என்றைக்கும் அசைக்க முடியாத அக்கறையும் நம்பிக்கையும் வைத்திருப்பதாகவும், இதில் அண்ணா, கருணாநிதி ஆகியோர் இதில் எந்த சந்தர்ப்பத்திலும் எவ்வித சமரசமும் செய்துகொண்டதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படுவதை தொடர்ந்து திமுக எதிர்த்துவருவதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களுக்குள் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருப்பதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அம்மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பதும், மத்திய அரசின் இந்த முடிவு நாட்டின் பாதுகாப்பு என்ற முக்கிய காரணத்தை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி நாட்டுப் பற்று கொண்ட அனைவருடைய மனதிலும் இயற்கையாக எழுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தமாநிலத்தை பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஆளுநர்களின் நிர்வாகத்தில் நிரந்தரமாக இருக்கும் விதத்தில் கொண்டுவந்திருப்பது, கூட்டாட்சித் தத்துவத்திற்கோ, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கோ ஆக்கபூர்வமான ஆரோக்கியமான விளைவுகளைத் தரும் நடவடிக்கைகள் அல்ல என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்திய ஜனநாயகத்தைக் கைவிடும் எவ்வித நடவடிக்கைகளையும் இப்படி அவசர கதியில் பாஜக அரசு எடுப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்த ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும் வரை குடியரசுத் தலைவர் இந்த அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details