தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவா? ’இந்தி’-யாவா? ஸ்டாலின் கேள்வி - இந்தியா, 'இந்தி' யா அல்ல

தமிழ்நாட்டில் இந்தியை எப்படியாவது திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

mk stalin

By

Published : Sep 14, 2019, 4:29 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழி தான் அந்த அடையாளத்திற்குரிய மொழி எனக் கருத்து வெளியிட்டிருப்பது இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் ‘இரண்டாம் தர குடிமக்களாக்கும்’ முயற்சியாகவே தெரிகிறது. அதிகம் பேசப்படுவது இந்தி என்பதால் அதுதான் தேசிய மொழி என்றால், இந்தியாவில் அதிகம் பறக்கும் காக்கை தானே இந்தியாவின் தேசியப் பறவையாக இருந்திருக்க வேண்டும் என அன்றே கேட்டவர் நம் தி.மு.க.வின் நிறுவனர் அண்ணா. அன்று தொடங்கி இன்று வரை இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்த் தமிழைக் காத்து, பிற மாநில மொழிகளுக்கும் அரணாக விளங்கி வருகிறது தி.மு. கழகம். தமிழ்நாட்டில் இந்தியை எப்படியாவது திணிக்க மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது

அமித் ஷா தனது கருத்தை மறுபரிசீலனை செய்வது, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உகந்ததாக இருக்கும் எனக் கருதுகிறேன். எனவே அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். பிரதமர் மோடியும் இது குறித்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனின், தி.மு.கழகம் இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும்.தமிழ்நாட்டில் உள்ள நட்பு சக்திகள் மட்டுமின்றி, இந்தி ஆதிக்கத்தால் உரிமைகளை இழக்கும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களையும் இணைத்து ஜனநாயகப் போர்க்களத்தை சந்திக்க தி.மு.கழகம் தயங்காது. நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க தி.மு.கழகம் தயாராக இருக்கிறது, இது இந்தியா. ‘இந்தி’யா அல்ல என எச்சரிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details