இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் உரிய பயனடைய வேண்டும் என்னும் நோக்கில், திமுக பல தளங்களிலும் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள் மற்றும் அழுத்தம் காரணமாக, எடப்பாடி அ.தி.மு.க. அரசு தற்போதாவது இறங்கிவந்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு அரசிடம் இந்த அதிகாரம் இருக்கிறது என்றால் - ஏன் மசோதா நிறைவேற்றினார்கள், ஏன் ஆளுநருக்கு அனுப்பி - அனைத்துத் தரப்பிலும் பதற்றத்தை ஏற்படுத்த, இத்தனை மாதம் கிடப்பில் போட்டார்கள் என்பது தனி விவாதத்திற்குரியது; விளக்கம் தரப்பட வேண்டியது.
இவ்வளவு காலம் மாணவர்களையும், பெற்றோரையும் ஏக்கத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கியது ஏன் என்பது தனிக் கேள்வி என்றாலும், மேலும் தாமதிக்காமல் இந்த இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
ஒருமனதாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தமிழ்நாடு ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடிதம் எழுதி - போராட்டம் நடத்தி - மத்திய உள்துறை அமைச்சருக்குத் திராவிட முன்னேற்றக் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்லாம் கடிதம் எழுதி கோரிக்கை வைத்தும், மத்திய பாஜக அரசோ - தமிழ்நாடு ஆளுநரோ தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த இடஒதுக்கீடு குறித்து இதுவரை கிஞ்சித்தும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை; மசோதாவிற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநருக்கு உரியபடி அறிவுறுத்தவும் இல்லை!