சென்னை:19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு சென்னையில் இன்று (அக்.12) நடைபெற்றது. இந்நிகழ்வில், ஆசிய விளையாட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மொத்தம் 20 வீரர் வீராங்கனைகளுக்கு மொத்தம் 9 கோடியே 40 லட்சத்திற்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார்.
இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'எந்தவொரு அரசாக இருந்தாலும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஒரு சில துறைகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தும். ஆனால் நம்முடைய அரசானது, அனைத்துத் துறைகளிலும் அதிக கவனம் செலுத்தி எல்லா துறைகளையும் ஒருசேர வளர்த்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, சில துறைகள் ஸ்டார் துறைகளாக வளர்ந்து வருகின்றன. அதில் விளையாட்டுத் துறையும் ஒன்று.
அனைத்து துறைகளிலும் வெற்றிதான்; அதிகாரிகளுக்கு பாராட்டு:இந்தத் துறையின் அமைச்சர் ஒரு ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ஸ்டார் துறையாக வளர்ந்துவிட்டது. விளையாட்டுத் துறையின் மூலமாக, விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் எழுச்சி பெற்று வருகிறது. நாள்தோறும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான விளையாட்டுத் துறை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதிலும், அமைச்சர் உதயநிதி அவர்கள் நடந்து அல்ல; ஓடிக் கொண்டே இருக்கிறார். அந்த துறையின் கேப்டனாக இருந்து, அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கும் அவரது துறையைச் சார்ந்த உயரதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.
பதக்கம் வென்ற தங்கங்களுக்கு 52.82 கோடி ஊக்கத்தொகை: மேலும் பேசிய அவர், 'மிக முக்கியமானது 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி. இனி யாரும் இப்படி நடத்த முடியாது என்று சொல்லத்தக்க வகையில் மெச்சத்தக்க வகையில் மிகக் குறுகிய காலத்தில் வெகு சிறப்பாக நடத்தி முடித்துக் காட்டினோம். அதேபோல் இந்த இரண்டு ஆண்டுகளில், பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கும் மற்றும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,864 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் 52 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.