சென்னை: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் அருகே இம்மாத முதல் வாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் கோயில்கள் நிர்வகிக்கப்படும் விதம் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.
இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி "எனது கேள்வி என்னவென்றால், எத்தனை மக்கள் தொகையோ அத்தனை உரிமை என்று சொல்கிறார்கள். நான் காங்கிரஸிடம் கேட்கிறேன். தெற்கில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் கோயில்கள் மீது அரசின் பிடி இருக்கிறது. அரசு அவற்றைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு கோயில்களின் சொத்துகள் கூட்டு சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. கோயில்கள் சூறையாடப்படுகின்றன. கோயில் சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன." இவ்வாறு கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
இந்த நிலையில், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலை மின்னஞ்சல் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், கோயில்களின் கட்டுப்பாடு அறநிலையத்துறையிடம் இருப்பதை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளாரே! அவரின் குற்றச்சாட்டுகளைக் கவனித்தீர்களா? இதற்குத் தமிழ்நாடு அரசின் பதில் என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 1118 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 5473 கோடி ரூபாய் மதிப்புள்ள 5820 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் தெரிந்துக் கொள்ளாமல் பிரதமரும் பேசியிருக்கிறார். அதற்கு நான் ஏற்கெனவே பதில் அளித்துவிட்டேன். இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சியில் என்ன நடக்கிறது? தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டித் தர இயலவில்லை. நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தர முடியவில்லை.
மாநிலத்திற்கு உரிய நிதி உரிமை - மாநில உரிமையை வழங்குவதில்லை. தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காமல், அரசியல் பேசி, அரசியல் சட்டப் பதவியான ஆளுநர் பதவியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவரை ஆளுநராக வைத்து, தமிழ்மொழியை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது
தமிழ்நாட்டிற்கு 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் செய்த சாதனைகள் ஏதுமில்லை. சிறப்பு திட்டங்கள் ஏதுமில்லை. ஆகவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்துள்ளது என்பதைச் சொல்லி வாக்குச் சேகரிப்பதில் பிரதமருக்கு நெருடல் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு என்ன செய்தோம் என்பதை சொல்ல இயலாத நிலையில்- பா.ஜ.க. அரசின் தோல்வியை திசைதிருப்பவே தமிழ்நாட்டில் சிறப்பாக கோவில் நிர்வாகத்தைச் செய்து கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறையை விமர்சிக்கிறார்" என்று முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க:உரைகளில் அடிக்கடி தெறிக்கும் 'இந்தி' பிரதமராகும் லட்சியம் உள்ளதா? - முதலமைச்சர் ஸ்டாலினின் நச் பதில்!