தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மு.க. ஸ்டாலின் ஆகிய நான்...

2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கு மிக நெருக்கத்தில் திமுக வந்ததற்கு ஒரே காரணம் ஸ்டாலின். ஏனெனில் அந்தத் தேர்தலில், உடல்நிலை காரணமாக கலைஞர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க, கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்த்த கட்சிகள் அனைத்தும் வேறு கூட்டணி அமைக்க, ஜெயலலிதா என்ற ஆளுமையை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவானது ஸ்டாலினுக்கு.

dfas
fdas

By

Published : May 7, 2021, 12:03 AM IST

மு.க. ஸ்டாலின் முதல்முறையாக தமிழ்நாட்டு முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அரியணையில் ஏறுகிறது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இந்த இடத்திற்கு வருவதற்கு முன் அவரது வெற்றிப் பயணம் எங்கு தொடங்கியது என்பதை இக்கட்டுரையில் காணலாம்

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்:

இந்திய அளவில் பாஜக அசுர பலத்தோடு திகழ்கிறது. முக்கியமாக, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல். அந்தத் தேர்தலில் இந்திய அளவில் வலுப்படுத்திய கரங்களோடு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது பாஜக. ஆனால், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39இல், 38 தொகுதிகளைப் பிடித்து மக்களவையின் இரண்டாவது பெரிய கட்சியாக அமர்ந்தது. தன்னால் ஆள முடியாத மாநிலங்களில் பாஜக சாதாரணமாக ஆடும் அரசியல் விளையாட்டை எதிர்கொள்வது அசாதாரணமான ஒன்று. அதனை மிக நேர்த்தியாக எந்தவித பதற்றமும் இல்லாமல் செய்தார் ஸ்டாலின்.

2014 மக்களவைத் தேர்தலில், ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடியாமல் இருந்த கட்சியை அடுத்த ஐந்து வருடங்களில் நாடாளுமன்றத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக அமர வைத்தார். குறிப்பாக, பாஜக சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டபோது திமுக பக்கம் நகர்ந்த விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்தார். இதன் மூலம் பெரும்படையோடு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது திமுக.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்:

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்திற்கு ஆளும் தரப்பு (அதிமுக) முட்டுக்கட்டை போட முனைந்தது. இருந்தாலும் ஸ்டாலின் தொடர்ந்து இயங்கினார். சில தொகுதிகளில் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களே ஸ்டாலினுக்கு எதிராகச் சாட்டை சுழற்றினார்கள். அதையும் அவர் பக்குவமாக எதிர்கொண்டார்.

ஒன்றிணைவோம் வா:

ஒன்றிணைவோம் வா இயக்கத்தின் மூலம் திமுகவின் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என அனைவரும் களமிறங்கி மக்களுக்காக பணியாற்றினர். அதில், அப்போதைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனையும் அந்த காலக்கட்டத்தில் கரோனாவிடம் இழந்தார் ஸ்டாலின்.

இருந்தாலும் அசராமல் தொடர்ந்து கட்சியினரைக் களப்பணியாற்ற வைத்தார். இப்படி ஒன்றிணைவோம் வாவில் ஸ்டாலினின் செயல்பாடுகள் அவர் பேரிடர் காலங்களிலும் மக்களுக்காக இயங்கக்கூடியவர் என்ற பிம்பத்தை உருவாக்கியது.

நமக்கு நாமே:

2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கு மிக நெருக்கத்தில் திமுக வந்ததற்கு ஒரே காரணம் ஸ்டாலின். ஏனெனில் அந்தத் தேர்தலில், உடல்நிலை காரணமாக கலைஞர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க, கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்த்த கட்சிகள் அனைத்தும் வேறு கூட்டணி அமைக்க, ஜெயலலிதா என்ற ஆளுமையை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவானது ஸ்டாலினுக்கு.

இருந்தாலும், ”நமக்கு நாமே” என்று அவர் ஒற்றை ஆளாக தமிழ்நாடு முழுவதும் சுற்றி சுழன்றார். ஆனாலும், விஜயகாந்த் தலைமையில் உருவான மக்கள் நலக் கூட்டணியால், திமுக தோல்வியைத் தழுவியது.

இனி:

மு.க. ஸ்டாலின் ஆகிய நான்... என்று கூறி இன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் கட்சியை பலப்படுத்துவதிலும், கூட்டணி கட்சிகளை அனுசரிப்பதிலும், களப்பணியாற்றுவதிலும் தன்னை ஒரு மிகச்சிறந்த தலைவராக நிரூபித்துவிட்டார். அவர் மிகச்சிறந்த முதலமைச்சராக தன்னை நிரூபிப்பது இனி அவரின் கைகளிலும், காலத்தின் கைகளிலும்... வாழ்த்துகள் மு.க. ஸ்டாலின்...

ABOUT THE AUTHOR

...view details