சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் 23ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க இதுவரை மொத்தம் 120க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் இருந்து பவானி தேவி (வாள்சண்டை ), சத்தியன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ்), சரத் கமல் ( டேபிள் டென்னிஸ்), நேத்ரா குமணன் (பாய்மர படகுப்போட்டி), கணபதி (பாய்மர படகுப்போட்டி), வருண் (பாய்மர படகுப்போட்டி), ஆரோக்கிய ராஜீவ் (தொடர் ஓட்டம்), நாகநாதன் பாண்டி (தொடர் ஓட்டம்), தனலட்சுமி (தொடர் ஓட்டம்), ரேவதி வீரமணி (தொடர் ஓட்டம்), சுபா வெங்கடேசன் (தொடர் ஓட்டம்), மாரியப்பன் தங்கவேலு (மாற்றுத் திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல்) உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜூலை 16) முகாம் அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக உரையாற்றினார்.
தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை
அப்போது அவர் பேசுகையில், “டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கவுள்ள 26 பேர் கொண்ட இந்திய தடகள அணியில், தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் இடம் பிடித்துள்ளனர் என்பது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெருமை. இந்த ஐந்து பேரும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் சிறப்பு. அதிலும் மூன்று பேர் பெண்கள் என்பது கூடுதல் பெருமைக்குரியதாகும்.