தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை மீன்வளம், பால்வளத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது பேசிய, திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன், அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் நேற்று (ஆக.28) பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை பாராட்டிப் பேசினார்.
இலங்கை அகதிகள் முகாம் எனக் கூறுவது தவறு
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பூண்டி கலைவாணன் பேசியது போலவே தானும் நேற்றைய தினம் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் என்றே குறிப்பிட்டதாகவும், இன்று முதல் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்றும், அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று (ஆக.27) சட்டப்பேரவையில் சட்டப்பேரவை விதி எண் 110இன்கீழ் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
வீடு, இதர உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 261 கோடியே 54 லட்சம் ரூபாயும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய 12 கோடியே 25 லட்ச ரூபாயும், மேம்பட்ட வாழ்க்கைத் திறனை மேம்படுத்த 45 கோடியே 61 லட்ச ரூபாயும் என மொத்தம் 317 கோடியே 40 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக ரூ.317 கோடி ஒதுக்கீடு - ஸ்டாலின்