சென்னை : சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி 5 மண்டலங்களில் தூய்மைப்பணி மேற்கொள்வதற்கான புதிய மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் காம்பாக்டர் இயந்திரங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும் பெருந்தொற்று பணிக்காலத்தில் உயிரிழந்த 195 நபர்களின் வாரிசுதார்களுக்கான பணி நியமன ஆணையையும் முதலமைச்சர் வழங்கினார்.
சிங்காரச் சென்னை
சிங்காரச் சென்னை திட்ட நிதியின் கீழ் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக 36.52 கோடி மதிப்பில் 1684 மூன்று சக்கர பேட்டரி வாகனங்களும், 15 காம்பர் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனியே பிரித்துப் பெறும் வகையில் வாகனம்தோறும் 6 தொட்டிகள் அமைந்துள்ளன.
அந்த நாள் நியாபகம்..
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், “ரிப்பன் மாளிகையை பார்க்கும்போது எனக்கு 1990இன் காலகட்டம் நினைவிற்கு வருகிறது. 1996ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்டேன். அப்போதெல்லாம் மேயரென்றால் பெரிய அங்கி, சங்கிலி அணிந்திருப்பார்கள்.
வெளி மாநில, வெளி நாடு சுற்றுலா செல்வதுதான் மேயர்களின் வேலையாக இருந்தது. அதை மாற்றி மேயர் பணி என்பதை மக்கள் பணி செய்வதாக மாற்றினேன். இந்தச் சாலை வழியே பயணிக்கும்போதெல்லாம் ரிப்பன் மாளிகையை பார்த்தபடியே செல்வேன். நான் மேயராக பொறுப்பேற்ற அழைப்பிதழின் முன் அட்டையில் கருணிநிதிக்கு பொன்னாடை போர்த்திய படம் இருந்தது.
கருணாநிதி வாழ்த்து...
கடைசி பக்கத்தில் ரிப்பன் மாளிகையின் கட்டட படம் இருந்தது. அதைப் பார்த்து விட்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உன்னை அடக்கிவிடாமல் இவ்வளவு பெரிய கட்டடத்தில் உன்னை அமர வைத்துள்ளேன் என்று கருணாநிதி என்னிடம் கூறினார்.
1996ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் என்னை அமைச்சராக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். ஆனால் மேயராக்கப்பட்டேன். மக்கள் வாக்கை பெற்று பதவிக்கு வந்த முதல் மேயர் நான்.