சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஆக.31) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் மின்மாற்றி இருக்குமிடத்தைச் சுற்றி பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் ரூ.18.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.1.9 கோடி மதிப்பீட்டில் 5 இடங்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், நீர்வளத்துறையின் சார்பில் ரூ.91.36 கோடி மதிப்பீட்டில் தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணி மற்றும் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மண்டல உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மின்மாற்றியினைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்பு:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் எஸ்.ஆர்.பி கோயில் வடக்கு பிரதான சாலை மற்றும் தெற்கு பிரதான சாலை, ஜவஹர் நகர் முதல் பிரதான சாலை ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் மின்மாற்றி இருக்குமிடத்தைச் சுற்றி பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் எஸ்.ஆர்.பி கோயில் வடக்கு பிரதான சாலையில் மின்மாற்றியினைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவிக நகர் பேருந்து நிலையம் அருகில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ், ரூ.15 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் பல்லவன் சாலையில் பெரியார் நகர், ஜவஹர் நகர் மற்றும் ஜிகேஎம் காலனி ஆகிய பகுதிகளுக்கு 1,110 மீட்டர் நீளத்திலும், ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் எஸ்.ஆர்.பி.கோயில் (வடக்கு).
ராமமூர்த்தி காலனியிலிருந்து பல்லவன் சாலை வரை 175 மீட்டர் நீளத்திலும், ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டாள் அவென்யூ பகுதியிலிருந்து பல்லவன் சாலை வரை 465 மீட்டர் நீளத்திலும் என மொத்தம் ரூ.18 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் 1,750 மீட்டர் நீளத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணிக்கு அடிக்கல்:வி.வி.நகர் 2வது தெரு பூங்காவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும், பூம்புகார் நகர் 4வது தெரு பூங்காவில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், பெரியார் நகர் 29வது தெரு பூங்காவில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், ஜவஹர் நகர் 5வது பிரதான சாலை பூங்காவில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டிலும், செல்வி நகர் 5வது தெரு விளையாட்டு மைதானத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 1 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 பூங்காக்கள் மற்றும் 1 விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் 5 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.