சென்னை:தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென்மாவட்டங்களில் அதிகமான கனமழை இரண்டு நாட்களாக பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள கிராமமக்களை உடனடியாக கிராமங்களை விட்டு வெளியேற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதிக கனமழை பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிச.18) வெளியிட்ட X பதிவில், 'தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருக்கவும். மிகவும் அவசியமில்லாவிட்டால் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்கவும். மத்திய, மாநில அரசுத்துறைகள் இயல்புநிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. விரைவில் நிலைமை சீரடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட X பதிவில், 'அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல் அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.