இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகத்தையே அச்சுறுத்திவரும் கரோனா நோய்த்தொற்றுக்கு தமிழ்நாட்டில் மேலும் ஒரு மருத்துவர் உயிரிழந்திருப்பது கவலையையும் வேதனையையும் பதற்றத்தையும் அதிகப்படுத்துகிறது.
சென்னையை அடுத்த வானகரத்திலுள்ள தனியார் மருத்துமவனையில் கோவிட்-19 வைரஸ் பாசிட்டிவ்வால் சிகிச்சை பெற்றுவந்த 51 வயது நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அந்தச் சோக நிகழ்வுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அவரின் குடும்பத்தாருக்கு இதயமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் அதே நோய்த்தொற்றுக்கு ஆளாவதும், அதுபோலவே, ஊரடங்கு காவல் பணியில் இரவுபகல் பாராது எந்நேரமும் ஈடுபட்டுள்ள காவல் துறையினரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கும் செய்தியும், மனதில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு நாள்தோறும் களத்தில் நின்று செய்திகள் சேகரிக்கும் ஊடகத்தினருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. மூன்று நாள்களில் தமிழ்நாட்டில் கரோனா தொற்று ஒழிந்துவிடும் என்று முதலமைச்சர் பழனிசாமி கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அன்று வர்க்க பேத ஆரூடம் கணித்து அறிவித்திருந்த நிலையில், நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடம் அவநம்பிக்கையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.