சென்னை: பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து 14ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவந்த நிலையில், நேற்று (செப்.24) முதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்தநிலையில் இன்று (செப்.25) மதியம் 1.04 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மறைந்த எஸ்பிபியின் உடல் மருத்துவமனையிலிருந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.
எஸ்பிபியின் உடலுக்கு பொது மக்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி வந்தனர். இதனையடுத்து, அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்ரோட்டில் உள்ள எஸ்பிபி பண்ணை வீட்டில் நாளை (செப். 26) பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், எஸ்.பி.பி. உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என, முதலமைச்சரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில், “தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி, பத்மஸ்ரீ-பத்மபூஷண் விருதுகள் பெற்ற எஸ்.பி.பி.யின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும்!” என, அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு மரியாதையுடன் எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...'இசையை இழந்த மொழியாய் அழுகிறேன்' - எஸ்.பி.பி மறைவு குறித்து வைரமுத்து!