தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா நிதியில் என்னென்ன மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டன?' - ஸ்டாலின் - மருத்துவ உபகரணங்கள்

சென்னை: மத்திய அரசு தமிழ்நாட்டுக்கென்று ஒதுக்கிய 6,600 கோடி ரூபாய் தொகையில் கொள்முதல் செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் குறித்த அறிக்கையை முதலமைச்சர் வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

By

Published : Jul 5, 2020, 12:43 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கு மட்டும் விலையின்றி அரிசி, அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருப்பது, கரோனா சோகத்தில் மூழ்கியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது.

மத்திய அரசே நவம்பர் மாதம்வரை, ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால், பாஜக அரசின் சரணம் பாடும் முதலமைச்சர் பழனிசாமி அரசோ ஜூலை மாதத்திற்கு மட்டுமே அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவோம் என்று அறிவித்திருப்பது பாதிக்கப்பட்டுள்ளோரின் பரிதவிப்பை உணர மறுக்கும், மனித நேயமற்ற செயல்.

மேலும் கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு மட்டுமே இதுவரை 6,600 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு நிதியுதவி வழங்கியிருக்கிறோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால், ஜூன் 17ஆம் தேதியன்று காணொலிக் காட்சியில் பிரதமரிடம், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய 3,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.

மத்திய நிதியமைச்சர், முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் நிதித்துறை அலுவலர்கள் ஆகிய மூவரில் யார் சொல்வது சரியான கருத்து? கரோனா தடுப்பிற்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு? மத்திய நிதியமைச்சர் ஒதுக்கியுள்ளதாகக் கூறியுள்ள 6,600 கோடி ரூபாய் கிடைத்ததா இல்லையா? அவ்வாறு கிடைத்திருந்தால் கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பது குறித்துத் தெளிவான அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வருமானவரிக் கணக்கு தாக்கல்: காலக்கெடு மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details