சென்னை: தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும், பொது அறக்கட்டளைகளுக்கும் தேவைப்படும் நிலங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தி இணையதளம் மூலம் 6 மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதியதாகச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வணிக நிறுவனங்களுக்கு நில அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்த நடவடிக்கை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - cm meeting
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையால் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணவும், இணையத்தின் வாயிலாக துரிதமாக துறை சார்ந்த சான்றிதழ்களை வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக உள்ள வருவாய்த்துறையின் முக்கிய பணியான மக்கள் குறைதீர்க்கும் பணியினை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தாமதமின்றி மக்கள் கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். குறிப்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையால் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணவும், இணையத்தின் வாயிலாக துரிதமாக துறை சார்ந்த சான்றிதழ்களை வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
ஆழ்கடலில் உள்ள மீனவர்களுடனான தொலைத்தொடர்பை மேம்படுத்துவதுடன், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மூலம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, புதிய முன்னெடுப்பு மூலம் உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களின் அவசரத் தேவை உள்ளவர்களையும், அதனை வழங்கத் தயாராக உள்ள ஆர்வலர்களையும் இணைக்கும் வகையில் இணையவழி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
இணையவழிப் பட்டா மாறுதல்கள், நில ஆவணங்களை நவீனப்படுத்துதல், கிராம வரைபடங்களை நவீனமயமாக்குதல், நிலம் தொடர்பான மேல்முறையீடுகளை இணையவழியில் மேற்கொள்ளும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன், எல்லா மாவட்டங்களிலும் நவீன நில அளவைக் கருவிகளைக் கொண்டு மறு நில அளவை செய்ய தொலைநோக்குத் திட்டம் தீட்டப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
வீட்டுமனை ஒப்படையில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள், மூன்று மாத செயல்திட்டம், தினசரி கண்காணிப்பு, நீர்ப்பகுதி புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு காலியாக உள்ள மாற்று நிலம் கண்டறிந்து ஊரக வளர்ச்சித்துறை / குடிசை மாற்று வாரியம் மூலம் வீட்டு வசதி ஏற்படுத்தித்தரவும், நில எடுப்பினை சீர் செய்யவும், நில எடுப்பின் போது கால தாமதத்தினைத் தவிர்க்கவும், தமிழ்நாடு சமூகத் தாக்க மதிப்பீட்டு பிரிவை ஏற்படுத்தி, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கு தனி அலகினை நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் அமைக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயச் சட்டம், 1961 பிரிவு 37-A மற்றும் 37-B)-இன் கீழ், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும், பொது அறக்கட்டளைகளுக்கும் தேவைப்படும் நிலங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தி இணையதளம் மூலம் 6 மாத காலத்திற்குள் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
TAGGED:
cm meeting