சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (மே16) பிரதமர் நரேந்திர மோடிக்கு பருத்தி, நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், “ தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து பிரதமரின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம். கடந்த சில மாதங்களாக, இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஒன்றிய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன்.
தற்போதுள்ள நிலைமை மற்றும் தமிழ்நாட்டின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, பருத்திக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை ஒன்றிய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்த போதும், நிலைமை சீரடையாத காரணத்தால் பருத்தி, நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழல் தமிழகத்தில் ஜவுளித் தொழிலுக்குப் பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான நூற்பு, நெசவு மற்றும் ஆடை அலகுகள், அவற்றின் செயல்பாட்டு மூலதனத்தின் நீடித்த தேவைகள் மற்றும் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப வாங்குபவருக்கு வழங்குவதற்கான ஒப்புக்கொள்ளப்பட்ட விலைக்கு இடையே விலை பொருந்தாததால் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், ஆடை உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.
இது பாரம்பரியமாக வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்தத் துறையில் வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூட்டுறவுத் துறையில் உள்ள கைத்தறி நெசவாளர்களால் நூலை கொள்முதல் செய்ய முடியாததால், துணி நெசவு செய்வதற்கும் தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை உருவாகி மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில் துறையிலும், நெசவாளர்கள் மத்தியிலும் அதிகரித்து வரும் அதிருப்தி தமக்கு கவலையளிக்கிறது.
எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, விலைவாசி உயர்வையும், அதன் விளைவாக ஏற்படும் இடையூறுகளையும் கட்டுப்படுத்திட பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.