சென்னை:சென்னையில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கின்றனர் எனவும், பல நிறுவனங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்று பெருமைப்படுத்த இருக்கிறார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேப்பிட்டாலாண்ட் டைடல் பார்க் திறப்பு விழா: சென்னை, பல்லாவரம் ரேடியல் சாலையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட் (CapitaLand) குழுமத்தின் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை இன்று (அக்.31) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், 'இது தமிழ்நாட்டில் புதியதொரு தொழில் புரட்சி. இதற்கு சான்றாக, ஏராளமான தொழில் நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் கேப்பிட்டாலேண்ட் நிறுவனமும் இணைந்திருப்பது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது. 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த சர்வதேச தொழில்நுட்பப் பூங்காவில், 50 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிவதற்கான உலகத்தரமான அலுவலக இடங்கள் கட்டப்பட்டிருக்கிறது.
முதல் கட்டமாக, இன்றைக்கு 1.3 மில்லியன் சதுர அடியில் பூங்கா தயார் நிலையில் உள்ளது. 2வது கட்டத்தின் கட்டுமானப் பணிகளையும் துவக்கி இருப்பதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. இந்நிறுவனத்தின் 2ஆம் கட்டத் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் செய்யும். கடந்த மே மாதம் சிங்கப்பூருக்கு அரசு முறைப் பயணமாக சென்றபோது, அங்கே கிடைத்த வரவேற்பும், உற்சாகமும் எங்களால் மறக்க முடியாதது. அப்போது, இந்நிறுவனத்தின் C.E.O.சஞ்சீவ் தாஸ் குப்தாவை சந்தித்து, அவர்கள் நிறுவனம் பல முதலீட்டு திட்டங்களை தமிழ்நாட்டில் மேற்கொள்ளுவதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினேன். அதன்படியே, இந்நிறுவனத்தின் திறப்பு விழா மகிழ்ச்சி தருகிறது. "தட்டுங்கள் திறக்கப்படும்" என்பதை போலவே, நடந்திருக்கிறது.
9 புதிய டைடல் பார்க்குகள்: எங்கள் ஆட்சியின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் தாங்கள் வைத்த நம்பிக்கைக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். தொழில்துறையில் முதல் மாநிலமாக திகழ்வது என உயரிய நோக்கத்துடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 2ஆம் மற்றும் 3ஆம் அடுக்கு நகரங்களிலும் 9 புதிய டைடல் பார்க்குகள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டும் வருகிறது. முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கின்ற வகையில், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களை அமைத்துக்கொண்டு வருகிறோம். வளர்ந்து வருகின்ற துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கின்ற வகையில், துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் பெருமளவில் ஈர்ப்பதற்காக திட்டங்கள் தீட்டினோம்.
உலகளவில் அதிவேகமாக வளரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப எடுத்த இம்முயற்சியில், இத்துறையில் முதலீடுகளை ஈர்க்கின்ற நோக்கத்தில்தான் "தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை 2022" கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதற்கு பின்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம், புத்தொழில்கள் மற்றும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற துறைகளில் ஒரு பெரும்மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழில்துறை கல்வியாளர்கள், புத்தாக்கம் மேற்கொள்வோர் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்களின் எண்ணிக்கை 30-க்கும் மேற்பட்ட GCC-க்கள் தங்களுடைய புதிய நிறுவனங்கள் அல்லது விரிவாக்கத் திட்டங்களை நிறுவியுள்ளனர்.