தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டீபன்சன் சாலையில் ‘செங்கை சிவம்’ மேம்பாலத்தை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - MK Stalin inaugurated the Chengai Sivam flyover

பெரம்பூர் ஸ்டீபன்சன் சாலையில் செங்கை சிவம் பாலம் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 01) திறந்து வைத்தார்.

new building
பூங்கா நூலகக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்

By

Published : Jul 1, 2023, 10:35 PM IST

Updated : Jul 1, 2023, 10:48 PM IST

பூங்கா நூலகக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை:கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கௌதமபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் பூங்கா, நூலகக் கட்டடம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டடங்கள் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'செங்கை சிவம் பாலம்' ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) திறந்து வைத்தார்.

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம்.காலனி 12வது தெருவில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி அறக்கட்டளையின் நிதியுதவியுடன் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள்:தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கௌதமபுரம் குடியிருப்பு பகுதி திறந்தவெளி நிலத்தில் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 80.69 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரமணா நகர், கௌதமபுரத்தில் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நூலகக் கட்டடம் மற்றும் 74 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டடங்கள் என ஒரு கோடியே 95 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

செங்கை சிவம் பாலம் திறந்து வைத்தல்:பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க.நகர் மண்டலம், புளியந்தோப்பு மற்றும் பெரம்பூர் பகுதிகளை இணைக்கும் வகையில், ஸ்டீபன்சன் சாலையில் மூலதன மானிய நிதி மற்றும் இதர திட்டங்களின் நிதியின் கீழ் 52.90 கோடி ரூபாய் செலவில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே பழுதடைந்த பழைய பாலத்தை இடித்துவிட்டு, 282 மீட்டர் நீளம் மற்றும் 22.70 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம், 7.13 கோடி ரூபாய் செலவில் 548 மீட்டர் நீளத்தில் பாலத்திற்கான சாலை மற்றும் அணுகு சாலை, மையத்தடுப்பு, இருபுறமும் நடைபாதை, மையத்தடுப்பில் வண்ணப் பூக்களுக்கான செடிகள் நடுதல் போன்ற பணிகள், 6.8 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் என மொத்தம் 830 மீட்டர் நீளத்தில் 66 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவில் இப்புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டுக்கு வந்த “செங்கை சிவம் பாலம்”:மழைக்காலங்களில் இச்சாலையில் தேங்கும் மழைநீர் வடியும் வகையில் குக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரையிலும், புளியந்தோப்பு பகுதியில் தேங்கும் மழைநீர் வடியும் வகையில் டாக்டர் அம்பேத்கர் சாலையிலிருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரையிலும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்டீபன்சன் சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவம் நினைவைப் போற்றும் வகையில் “செங்கை சிவம் பாலம்” என்று பெயர் சூட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்தப் பாலம் கட்டப்பட்டதன் மூலம், பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, புரசைவாக்கம் மற்றும் வேப்பேரி பகுதிகளில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரிதும் பயனடைவதோடு, நாள்தோறும் சராசரியாக சுமார் 70 ஆயிரம் வாகன ஓட்டிகள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீனை சைவத்தில் சேர்க்க வேண்டும் - ருசியாகப் பேசிய தமிழிசை

Last Updated : Jul 1, 2023, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details