சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (அக்.1) திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கியதும், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளர் மயிலை வேலு என சரியாக செயல்படாத ஆறு மாவட்ட செயலாளர்களை மு.க.ஸ்டாலின் பேசக் கூறினார்.
குறிப்பாக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியபடி, நூறு வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்பதை பல மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செய்து வந்தாலும், சில மாவட்ட செயலாளர்கள் சரியாக செயல்படாததாகவும் அவர் கண்டித்தார்.
அதில், சென்னையைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, மயிலை வேலு, மாதவரம் சுதர்சனம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் மற்றும் சில மாவட்ட செயலாளர்கள் இந்த விஷயத்தில் மிக மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகிறீர்கள் என்றும் இது நல்லதல்ல என்று கடுமையாகச் சாடினார்.