சென்னை:கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் எவ்வாறெல்லாம் மக்களிடம் பிரச்சாரம் செய்தனர், மக்களிடம் வெறுப்புப் பிரச்சாரத்தை டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் எவ்வாறு கொண்டு சென்றனர் என்பது குறித்து “தி வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில், தேர்தலின்போது வாட்ஸ்அப் மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக, ஒரு அரசியல் கட்சி வழக்கமாக செய்யும் பிரச்சாரத்தைப் போல மக்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், தாங்கள் எங்கெல்லாம் சாலை அமைத்தோம், புதிதாக கட்டிய பள்ளிக்கூடங்களின் விவரங்கள், இலவச உணவு வழங்கியது உள்ளிட்ட விவரங்களை அனுப்பினர்.
பின்னர், தேர்தல் தேதி நெருங்கியதும் பாஜகவிடம் இருந்து வந்த வாட்ஸ்அப் செய்திகள் அனைத்தும் இருள் சூழ்ந்து இருந்ததாக அதில் கூறப்பட்டது. அதாவது, கர்நாடகாவில் முஸ்லிம்களால் கொல்லப்பட்ட 24 இந்துக்களின் பெயர்களைப் பட்டியலிட்டு மக்களுக்கு குறுஞ்செய்திகளாக அனுப்பியுள்ளதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்களை பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தும் விதம் குறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது காலத்திற்கேற்ப டிஜிட்டல் ஊடகங்களைக் கையாளும் வியூகமா அல்லது அதிகார அத்துமீறலா? இது பற்றிய உங்களின் கருத்து என்ன? என ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர், சங்கரநாராயணன் சுடலை, மின்னஞ்சல் வாயிலான பேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.