இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 30) வெளியிட்டடுள்ள அறிக்கையில் “தொல்லியல் அலுவலருக்கான தேர்வில் தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு பயின்றவர்களுக்கு வேலையில்லை” என்று, அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுத்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது 28.11.2019 அறிவிப்பின் மூலம் 18 தொல்லியல் அலுவலர் பதவிக்குத் தேர்வு அறிவித்தது. அப்பதவிக்கு எம்.ஏ., தமிழ், எம்.ஏ., வரலாறு ஆகிய கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. இத்துடன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் வழங்கப்பட்ட கல்வெட்டியல், தொல்லியல் முதுநிலைப் பட்டயம் (Post Graduate Diploma In Epigraphy and Archaeology) எனும் கல்வித் தகுதி இருந்தும், நடந்து முடிந்துள்ள தேர்வில், நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை நிராகரித்துள்ளதும், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதும் மிகுந்த வேதனைக்குரியது.
பிற மாநிலங்களில் பயின்ற தொல்லியல்துறை மாணவ, மாணவிகளைக் கலந்தாய்வுக்கு அழைத்துள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏன் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பயின்ற மாணவ, மாணவியரை நிராகரிக்கிறது? அங்கு ஓராண்டு முதுகலைத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பட்டயம் பெற்ற மாணவ மாணவியருக்கு ஓரவஞ்சனை செய்து ஒதுக்குவது ஏன்? தமிழ்நாட்டில் படிப்போருக்குத் தமிழ்நாட்டில் வேலை கொடுக்க மறுப்பது ஏன்? பிற மாநில மாணவர்களை அழைத்ததோடு மட்டுமின்றி, Other Category என்ற பிரிவிலிருந்து இரு மாணவர்களை இந்தக் கலந்தாய்வுக்கு அழைத்ததன் காரணம் என்ன? தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் நான்கில் மூன்று பங்கு தமிழில்தான் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது தமிழ் படித்த மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை கொடுக்காமல் அவர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பது அராஜகமானது; கடும் கண்டனத்திற்குரியது.
இந்த விண்ணப்பங்களில் தமிழ் மொழி பயின்றதற்கான முன்னுரிமை இடஒதுக்கீடு கோருபவரா என்று கூடக் கேள்வி எழுப்பாமல், ஒரு விண்ணப்பப் படிவத்தை வெளியிட்ட தேர்வாணையம், தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் படித்தவர்களைப் புறக்கணிப்பதை அதிமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
நிராகரிக்கப்பட்ட மாணவ, மாணவியர் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் என்பது இன்னொரு கொடூரம்! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தீ. ஆனந்தி 316 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் 4 ஆவது இடத்திலும், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கீதா 4 ஆவது இடத்திலும், அனிதா 14ஆவது இடத்திலும் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் இவர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.