தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பங்காரு அடிகளார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.. அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு என அறிவிப்பு! - to Bangaru Adigalar passed away

RIP Bangaru Adigalar: பிரபல ஆன்மிகவாதி பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 8:35 PM IST

சென்னை:ஆன்மீக சீர்திருத்தவாதியான பங்காரு அடிகளார்(82) மாரடைப்பால் இன்று (அக்.19) காலமானார். செங்கல்பட்டு மாவட்டம், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய இவர், பெண்களைக் கோயில் கருவறைக்குள் சென்று வழிபட வைத்தது, ஆதிபராசக்தி தொண்டு நிறுவனம் மற்றும் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே, இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மரியாதையுடன் இவரின் இறுதிச் சடங்கு நடைபெறும் எனக் கூறியுள்ளார். இது குறித்து X பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு பங்காரு அடிகளார் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச் சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார். 'அம்மா' என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார்.

கோயில் கருவறைக்குள் அனைத்து சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக திமுக பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப்படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூஜை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மீகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது. அவரது ஆன்மீக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு 'பத்மஸ்ரீ விருது' வழங்கிப் பெருமைப்படுத்தியது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் "நம்மைக் காக்கும் 48" திட்டத்தைத்தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல் நலிவுற்றிருந்த பங்காரு அடிகளார் அவர்களை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் தற்போது நிறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.

பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details