சென்னை: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 56. இன்று காலை 'எதிர்நீச்சல்' தொடருக்காக டப்பிங் பணிகளில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடன் பணியாற்றியவர்கள் அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மாரிமுத்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மறைந்த இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், " கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர், மாரிமுத்து.
ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ் பெற்றார். மேலும், பல நேர்காணல்களிலும், நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையேக் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.