தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளின் வாழ்வோடு கண்ணாமூச்சி: மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் - உரங்களின் விலை உயர்வு

சென்னை: உர விலையை உயர்த்திவிட்டு – “இப்போது அமல்படுத்தமாட்டோம்” என்று விவசாயிகளின் வாழ்வுடன் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ட்ஃபச்
டச்

By

Published : Apr 11, 2021, 8:54 AM IST

விவசாயிகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 50 கிலோ கொண்ட டி.ஏ.பி உரம் கடந்த பிப்ரவரி மாதம் ரூ 1200க்கு விற்பனையானது. ஆனால், தற்போது 700 ரூபாய் உயர்ந்து 1900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எதிர்க்கட்சியினரும் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.

அந்தவகையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றும் வகையில் 58 சதவீத உரவிலை உயர்வின் மூலம் - 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலையை 1200 ரூபாயிலிருந்து 1900 ரூபாயாகச் செங்குத்தாக உயர்த்தியிருப்பதற்கும், சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அராஜகமாகக் கலைத்திருப்பதற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசுவதற்குக் கூட மனமில்லாத - மார்க்கம் தெரியாத - மனிதாபிமானமற்ற மத்திய பா.ஜ.க. அரசு, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பாழ்படுத்தும் வகையில் உரவிலையை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த டி.ஏ.பி. உர விலை உயர்வைத் தொடர்ந்து என்.பி.கே. உரங்களின் விலையும் 50 சதவீதம் வரை உயர்ந்து - இன்றைக்கு நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயக உரிமைகளுக்காக - தங்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி பழிவாங்குவது நியாயமல்ல!உரவிலையைக் கண்டித்து நாடுமுழுவதும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஆங்காங்கு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

இதன் பிறகு “உரவிலை உயர்வு இப்போதைக்கு கிடையாது” என்று மட்டும் ஒப்புக்காக ஒரு அறிவிப்பு மத்திய பா.ஜ.க. அரசு தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத் தேர்தல் முடிந்தவுடன் இந்த விலையேற்றத்தைச் செயல்படுத்துவதற்கான ஒத்திகையே இந்த அறிவிப்பு! ஏற்கனவே சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து விட்டு - பிறகு திரும்பப் பெற்றது இந்த அரசு! இப்போது உர விலையை உயர்த்திவிட்டு – “இப்போது அமல்படுத்தமாட்டோம்” என்று விவசாயிகளின் வாழ்வுடன் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details