இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, மீண்டும் வெகு நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வைத்துப் போராடிய ஜாக்டோ- ஜியோ அமைப்பினைச் சேர்ந்த ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை இதுவரை ரத்து செய்யாமல் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்குத் திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் பலனில்லாததால் - கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடங்கினார்கள். அப்போது - பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, அரசு ஊழியர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தரம் தாழ்ந்த காரியத்தை மட்டுமே அதிமுக ஆட்சி செய்தது.
இந்நிலையில், வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி, உள்ளே நஞ்சை வைத்து வெளியே நயமாக, வேண்டுகோள்விடுத்தார். ஆனால் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டு கரோனா காலத்திலும் மக்களுக்காக அயராது பணியாற்றிவரும் 5068 ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு 17(பி)-யின் கீழ் குற்றக் குறிப்பாணைகள் வழங்கி பேரின்னலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது.