தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு - முதலமைச்சர்! - முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.25 ஆயிரம் என்பதில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 19, 2023, 10:44 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளுக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று (ஏப்.19) நடந்த மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவப் படி தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், 'இங்கே சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்து வைத்திருக்கிற கோரிக்கையின் அடிப்படையிலே, இப்போது அரசுக்கு இருக்கக்கூடிய நிதிநிலை சூழ்நிலைக்கேற்ப, ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன். இங்கே உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்தித் தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள்.

அதனடிப்படையில், பின்வரும் அறிவிப்புகளை அறிவிப்பதில், உங்களோடு சேர்ந்து நானும் ஓரளவிற்கு மகிழ்ச்சி அடைந்து, அவற்றை அறிவிக்கிறேன்' என்றார்.

'முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் ரூபாய் 25 ஆயிரம் என்பது, ரூபாய் 30 ஆயிரமாக, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஜூன் மாதம் முதல் உயர்த்தப்படும்' என்று அறிவித்தார்.

அதேபோல், 'தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய குடும்ப ஓய்வூதியம் மாதம் ஒன்றிற்கு ரூபாய் 12,500 என்பது, மாதம் ஒன்றிற்கு ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தப்படும். அதேபோல், முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு, தற்போது ஆண்டு ஒன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 50 ஆயிரம் ரூபாய் என்பது, 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

இதையும் படிங்க:Atiq Ahmed Murder: அலட்சியமாக இருந்ததாக 5 போலீசார் பணியிடை நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details