தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. நாளை முதல் நாவலூர் டோல்கேட் கட்டணம் ரத்து.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! - சென்னை செய்திகள்

Chennai Navalur toll gate closed: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நவலூர் சுங்கச் சாவடியில் நாளை(அக்.19) முதல் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 3:24 PM IST

சென்னை: 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்களை நேரடியாக சந்தித்து அரசு திட்டங்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு அலுவலர்களாகிய நீங்கள் அளித்து வரும் சிறப்பான செயல்பாட்டினால், இந்த அரசு பொறுப்பேற்றது முதல் வகுத்துத் தரும் திட்டங்கள் சீரிய வகையிலும், பொதுமக்கள் போற்றும் வகையிலும் அவர்களை சென்றடைந்து வருகின்றன.

குறிப்பாக கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட 'மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்' அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் உங்கள் அனைவரின் பங்களிப்பால் திறம்பட செயலாக்கப்பட்டு, சில தினங்களுக்கு முன் இரண்டாவது தவணைத் தொகையையும் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கபட்டது. புதுமைப் பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், முதல்வரின் முகவரி, நான் முதல்வன் இது போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற திட்டங்கள் உங்களது சிறப்பான பணியினால் மக்களை சென்றடைந்துள்ளது. அதற்காக உங்கள் அனைவரையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தென் சென்னைப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலையில் உள்ள பெருங்குடி கட்டணச் சாவடியில் சாலைப் பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது. இதனால், இப்பகுதி வழியாக செல்வோரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தனர். தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் பல பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று, நாளை(அக்.19) முதல் நாவலூர் கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று கூறினார்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:“தெர்மாகோல் பற்றி பேசி நம்மளத்தான் ஓட்டுறாங்க” - செல்லூர் ராஜு வேதனை!

ABOUT THE AUTHOR

...view details