சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.13) ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசியபோது புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவையாவன பின்வருமாறு,
'கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்: 'இந்த திட்டத்தின் அடிப்படையில் முக்கிய ஊராட்சி ஒன்றிய சாலைகளை வலுப்படுத்தவும், தரம் உயர்த்தவும், “முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக, 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்:முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்தத் திட்டத்தினை 2023-2024ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட முடிவு செய்துள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு: (World Investors Conference 2024) பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில், தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது.