இதுகுறித்து அமைச்சர் ஆர்.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, முதலமைச்சரின் உத்தரவின்படி, கடந்த 2019-2020 கொள்முதல் பருவத்தில் 2135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, 1.10.2019 முதல் 30.9.2020 முடிய 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. பொதுவாக 1500 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் நிலையில், 2019-2020 பருவத்தில் வரலாறு காணாத வகையில் 2135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதன் மூலம் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத் தொகை ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6,130 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டவுடன் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் 5 லட்சத்து 85 ஆயிரத்து 241 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
ஊரடங்கு காலத்திலும் தமிழ்நாட்டில் எந்த ஒரு விவசாயியும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் அரசு கரோனா தொற்று ஏற்படாத வகையில் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்களை தொடங்கி, கொள்முதல் நிலையத்திற்கு வரும் அனைத்து விவசாயிகளிடம் இருந்து ஊரடங்கு காலத்தில் மட்டும் 12.77 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்தது. இதன் மூலம் மொத்தம் 2416.05 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 518 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி அன்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டதாலும், பருவ மழை நல்ல முறையில் பெய்ததாலும், தேவையான இடுபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்குக் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாலும், கடைமடை வரை மழைக்காலத்திற்கு முன்பே வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதாலும், தமிழ்நாடெங்கும் விவசாயிகளால் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, நெல் விளைச்சல் அமோகமாக உயர்ந்துள்ளது.
குறுவை பருவத்திற்கான நெல்லை கொள்முதல் செய்ய, அறுவடை கால தொடக்கத்திலேயே, அதாவது 1.10.2020 அன்றே, 591 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் பணி தொடங்கப்பட்டது. மேலும், அனைத்து டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் விவசாயிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 4ஆவது தேதி வரையில் 816 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 4.10.2020 மற்றும் 11.10.2020 ஆகிய இரண்டு ஞாயிறு விடுமுறை நாட்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணி நடைபெற்றது. இப்பருவத்தில் 1.10.2020 முதல் இதுவரை, 1.55 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் அளவானது குறுவை பயிர் கொள்முதல் காலத்தில் செய்யப்பட்ட அதிகபட்ச கொள்முதல் அளவாகும்.