சென்னை: 'மக்களுக்கு சேவைகளை வழங்கும் அரசு அலுவலகங்கள் எல்லாம் மக்கள் எளிதில் அணுகி சேவைகளை பெறக்கூடிய ஒரு இடமாக இருக்க வேண்டும். தாமதங்களும் வீண் அலைக்கழிப்புகளும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்' என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 13) 'முதல்வரின் முகவரி துறை'யின் (Muthalvar Mugavari Thurai) செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரையாற்றினார்.
அரசின் சேவை கிடைப்பதை உறுதி செய்க:அப்போது பேசிய அவர், இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் பெரிய பல திட்டங்களையும் நீண்ட கால தொலைநோக்கோடு செயல்படுத்தி வந்தாலும், மக்களின் அன்றாட தேவைகளை அவர்களது கோரிக்கைகளை நாம் நிறைவேற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொரு துறையின் பொறுப்பாகும் என்றார்.
பல்வேறு துறை அலுவலர்கள் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பெறப்படும் கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து உரிய தீர்வுகளைக் கண்டு பொதுமக்களுக்கு அதன் விவரத்தை தெரிவிக்காத காரணத்தினாலேயே தான் மக்கள் 'முதலமைச்சரின் முகவரி துறைக்கு' மனுக்களை அனுப்புகிறார்கள் எனத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதன் காரணமாகத்தான் இன்று குறிப்பாக, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய இரு துறைகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார்.
சான்றிதழ்களை ஆன்லைனில் வழங்குங்கள்: இந்த இரு துறைகளிலும் மனுக்கள் அதிக எண்ணிக்கையில் பெறப்படுகிறது. காரணம், மக்களுக்கு அதிக அளவில் இத்துறைகளின் சேவை தேவைப்படுகிறது. ஆனால், அவை அவர்களை முழுமையாக அடையவில்லை என்பதுதான் முக்கியக் காரணம். அரசின் சேவைகள் சான்றிதழ்கள் போன்றவை கூடுமானவரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வருவாய்த்துறையை கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
வீட்டுமனைப்பட்டா: தற்போது ஆன்லைன் முறை இருப்பதாக கூறப்பட்டாலும் நடைமுறையில் பார்க்கும்போது, அதில் பல சிக்கல்கள் உள்ளதாக அறிகிறேன். அதனைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், வீட்டுமனைப்பட்டா கோரி வரும் பெரும்பாலான மனுக்களில் இடைநிலை பதில்களே வழங்கப்படுகின்றன. மனுதாரரை உரிய முறையில் விசாரணை செய்து தகுதியிருப்பின் உரிய நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
தனிப்பிரிவு மனுக்களுக்கு முன்னுரிமை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளில் நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் தனிப்பிரிவு மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும்; பட்டா மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர்கள் விரைவான விசாரணைக்குட்படுத்தி தீர்வு வழங்குவதை உறுதி செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார்.
சான்றிதழ்கள் நிராகரிக்கப்படும் இனங்களில் உயர் அலுவலருக்கு மேல்முறையீடு செய்ய இ-சேவையில் உரிய வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும்; சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள், சான்றிதழ் தொடர்பான முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அரசு அலுவலகங்கள்; எளிதில் சேவை பெறும் இடங்களாக வேண்டும்: விரைவான தீர்வு மட்டுமல்லாமல் சரியான வகையில் தீர்வு செய்வதை உறுதிபடுத்த துறைத்தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வாரந்தோறும் கட்டாயம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனுதாரரிடம் தொடர்பு கொண்டு மனுவின் தீர்வு முறையை அறிந்து மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர்,
மக்களுக்குச் சேவைகளை வழங்கும் அரசு அலுவலகங்கள் எல்லாம் மக்கள் எளிதில் அணுகி சேவைகளை பெறக்கூடிய ஒரு இடமாக இருக்க வேண்டும் என்றார்.
வீண் அலைக்கழிப்பைத் தவிர்க்கவும்:தாமதங்களும் வீண் அலைக்கழிப்புகளும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மக்களும் அவர்கள் அளிக்கும் மனுக்களும் அலுவலகங்களில் மதிக்கப்பட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டால் தான் அரசு தன் கடமையை, பணியை முறையாக ஆற்றுவதாக கருதப்படும் என அவர் தெரிவித்தார். காவல்துறையைப் பொறுத்தவரையில், பொதுவாக மனுக்களை ஆய்வு செய்ததில் பண மோசடி, குடும்பப் பிரச்னை, வாடகைதாரர் பிரச்னை மற்றும் நிலப் பிரச்னை போன்றவையே அதிகம் இடம்பெற்றுள்ளன எனக் குறிப்பிட்டார்.