சென்னை: 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சி திமுக. திமுகவின் அதிகாரமிக்க பதவியான தலைவர் பதவியில் அண்ணா மறையும் வரை இருந்தார். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதி தலைவராக பொறுப்பேற்றார். கிட்டதட்ட 50 ஆண்டுகள் திமுகவையும், தமிழக அரசியலையும் தன்னை சுற்றி சுழலும்படி கருணாநிதி வைத்திருந்தார். கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக செயல்பட்டு வந்தார். 2018 ஆக.7ஆம் தேதி கருணாநிதி மறைவை தொடர்ந்து அதே ஆண்டு ஆக.28ஆம் தேதி திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெற்று 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது ஆட்சியில் அதிமுக இருந்தது. அதனால், கருணாநிதிக்கு மெரினாவில் சட்டப்போராட்டத்தின் மூலமே இடம் கிடைத்தது. அன்றில் இருந்து பல போராட்டகளை மேற்கொண்டு 2021ஆம் ஆண்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது மாநிலத்தில் இருந்த அதிமுகவையும், மத்தியில் இருந்த பாஜகவையும் கடுமையாக எதிர்த்தார்.
இதன் பலனாக 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய அளவில் காங்கிரஸ்சிற்கு அடுத்தப்படியாக அதிக இடங்களை திமுக பெற்றதால் தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் கவனம் பெற்றார். ஒன்றிணைவோம் வா, விடியலை நோக்கி பயணம் என்ற பிரச்சார யுக்திகளும் மு.க.ஸ்டாலினுக்கு கைகொடுத்தது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெற்றது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி கட்சிகளுடன் கைகோர்த்து தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்றது. இப்படி, திமுக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே தொடர் வெற்றிகளை மு.க.ஸ்டாலின் குவித்துள்ளார். பாஜக எதிர்ப்பு, தொடர் வெற்றிகள் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சவாலாக திகழ்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் நோக்கில் மாவட்ட வாரியாகவும், பூத் வாரியாகவும் ஒரு சில முன்னெடுப்புகளை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் இருந்து அதே கூட்டணியோடு 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக களமிறங்குகிறது.
தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக இந்தியா(INDIA) கூட்டணி அமைத்ததில் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய தலைவர்களில் இன்னும் பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியாக இருக்கலாம் என்றாலும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காலதாமதம் ஆகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.