தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காணாமல்போன மயில் சிலை கண்டுபிடிப்பு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை, கோயில் குளத்தில் புதைக்கப்பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மயிலாப்பூர்
மயிலாப்பூர்

By

Published : Mar 1, 2022, 7:50 PM IST

சென்னை:மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 2004ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவுக்குப் பின், புன்னைவனநாதர் சந்நிதியில், லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்ததாகவும் அந்த சிலை மாயமானதாகவும், அதற்குப் பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைத்துள்ளது ஆகம விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும் கூறி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வழக்குத் தொடர்ந்திருந்தார். புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கெனவே இருந்த சிலையை வைத்து குடமுழுக்கு நடத்தவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று(மார்ச்.1) விசாரணைக்கு வந்த போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புன்னைவனநாதர் சந்நிதியில் அலகில் மலருடன் தான் மயில் சிலை இருந்தது என்பதற்கு எந்த புகைப்பட ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், அலகில் பூவுடன் இருந்த மயில் சிலையே இலச்சினையாக இருந்ததாக நிபுணர்களும், அர்ச்சகர்களும் தெரிவித்துள்ளதாகவும், அதனால் அலகில் பாம்புடன் உள்ள மயில் சிலையை மாற்றி விட்டு, அலகில் பூவுடன் இருந்த மயில் சிலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிலை திருட்டு வழக்குத் தொடர்பான விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய 6 வார கால அவகாசம் அடுத்த வாரம் முடிவடைவதாகவும், இதுவரை மேற்கொண்ட விசாரணையில் கோயில் குளத்தில் மயில் சிலை புதைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிலையைக் கண்டறிய குளத்தை தோண்டுவதற்குப் பதில் வேறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமா? என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியை அணுகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை ஏற்று, குளத்தில் சிலை உள்ளதா? என்பதைக் கண்டறிய இரண்டு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், சிலை மீட்கப்பட்ட பின் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.

முன்னதாக அண்மையில் கோயிலுக்குச் சென்றதாகவும், மயில் சிலையைப் பார்வையிட்டதாகவும் கூறிய தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது எனத்தெரிவித்தார். ஆனால், மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மனும், எதிர்மனுதாரர்களும் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதையடுத்து தலைமை நீதிபதி விசாரணையைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு: 'நான் முதல்வன்' புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details