இதுகுறித்து, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (சென்னை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “13.07.2020 தேதியிட்ட சில நாளிதழ்களில் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து வெளியான செய்தியில் பல விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை தவறான புள்ளிவிவரங்கள். அது குறித்து கீழ்க்கண்ட விளக்கத்தினை ஆவின் நிறுவனமாகிய தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநிலத்தில் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 230 இலட்சம் லிட்டர் பாலில், ஆவின் நிறுவனம் 40 லட்சம் லிட்டர் அதாவது 17 விழுக்காடு மட்டுமே கொள்முதல் செய்து வருகிறது. மீதமுள்ளவை உள்ளூர் தேவைக்காக 17 விழுக்காடும், தனியார் பால் நிறுவனங்கள் 16 விழுக்காடும், அமைப்புசாரா விற்பனையாளர்கள் 50 விழுக்காடும் கொள்முதல் செய்கின்றனர்.
கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் நலனையும், அவர்களின் பொருளாதார தேவையினையும் கருத்தில் கொண்டு அரசு நிர்ணயித்த பால் கொள்முதல் விலைப்பட்டியல் அடிப்படையில் தரத்திற்கேற்ற விலையில் பாலிற்கான பணம் வழங்கப்பட்டுவருகிறது. கரோனா நோய் தொற்று மற்றும் ஊரடங்கு காலத்திலும் இவை பின்பற்றப்படுகிறது.
மூன்று மாதங்களாக கிராமப்புற பால் உற்பத்தியாளர்களை, கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக இணைத்து தரமான பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.32 என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது.
இதன் காரணமாக முன்னர் நாளொன்றுக்கு 29 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது நாளொன்றுக்கு 40.28 இலட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. அதேபோல பால் விற்பனையும் கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 22.89 லட்சம் லிட்டரிலிருந்து தற்போது 9.21 விழுக்காடு உயர்ந்து, நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் கர்நாடகாவின் கொள்முதல் 88 லட்சமாக உயர்ந்ததை பாராட்டி செய்தி வெளியிட்டு தமிழ்நாட்டின் சாதனையை கேள்விக்குறியாக்கி சில நாளிதழ்கள் வெளியிட்டுள்ளது.
மேலும் ஆவின் நிறுவனத்தின் தொடர் முயற்சியால், விற்பனை முகவர்கள் நியமித்தல், சோமாட்டோ, ஸ்விகி மற்றும் டன்சோ நிறுவனங்களின் மூலம் நுகர்வோர்களின் வீடுகளுக்கே சென்று பால் பொருட்கள் விற்பனை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா காலத்திற்கு முன்னர், மாதம் ஒன்றுக்கு ரூ. 34.78 கோடி என்ற விற்பனை மதிப்பு தற்போது ரூ.41.15 கோடிக்கு உயர்ந்துள்ளது. ஊரடங்கால் அனைத்து மாநில கூட்டுறவு நிறுவனங்களின் விற்பனை குறைந்த நேரத்தில் மற்ற மாநில கூட்டுறவு நிறுவனங்களை விட தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனம் இந்த குறுகிய மூன்று மாத காலத்தில் விற்பனையில் என்றும் இல்லாத அளவில் சாதனை செய்துள்ளது.
இதனை, மே மாதத்தில் நடைபெற்ற மத்திய அரசின் பால்வளத்துறை காணொலி காட்சி கூட்டத்தில் ஆவின் நிறுவனத்தை பாராட்டியுள்ளது.
பால் கொள்முதல் உயர்ந்ததன் காரணமாக விற்பனைக்கு போக மீதமுள்ள உபரிப்பால் பால்பவுடராகவும் வெண்ணெயாகவும் உருமாற்றம் செய்யப்படுகிறது. தற்போது மாநில அளவில் மொத்தம் 8,400 மெ.டன் அளவில் பால்பவுடர் இருப்பில் உள்ளது. தற்போது நாளொன்றுக்கு இந்தியா முழுவதும் மொத்த கொள்முதல் 40 முதல் 45 விழுக்காடு பால்பவுடராக உருமாற்றம் செய்யப்படுகிறது.
தேசிய அளவில் பால்பவுடரின் இருப்பு 1,70,000 மெ.டன் அளவிற்கு அதிகரித்துள்ளதால் அதன் விற்பனை விலை சரிந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பால்பவுடரை குறைந்த விலைக்கு விற்க முடியாத காரணத்தால் சந்தையில் தேவை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும் பொழுது இருப்பு வைத்துள்ள பவுடரை விற்க இயலும். பால்பவுடர் இருப்பு வைத்துள்ளதால் ஆவினில் நஷ்டம் ஏற்படுவது தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.
ஒரு சில நாளிதழ்களில் ஆவினில் அதிக பால்பவுடர் இருப்பு பற்றி கேள்விக்குறியுடன் செய்தி தலைப்பு வெளியிட்டு, கர்நாடகாவின் நந்தினியின் பால்பவுடர் உற்பத்தி ஆவினை விட இருமடங்காக இருக்கும் நிலையில் அதை நந்தினி சாதனை என்று செய்தி தலைப்பிட்டு வெளியிட்டது பத்திரிக்கை, செய்திதாள்களின் பாரபட்சமின்றி செயல்படும் முறைக்கு மாறாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி, கல்வித் தொலைக்காட்சி தொடக்கம்