கெட்டுப்போன உணவு வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்பட்டதா?!- நடந்தது என்ன? சென்னை: ஆவடி கோவர்தனகிரியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைன் வாயிலாக குழந்தைக்கு மதிய உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவு நேற்று மதியம் 1.14 மணி அளவில் ஸ்விக்கி வாயிலாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பெண், உணவு பொட்டலத்தை நண்பகல் 2 மணி அளவில் திறந்து பார்த்தபோது, சாதம் குழைந்து கெட்டு போனதுபோல் காட்சி அளித்துள்ளது. அவர் உடனே இது குறித்து, வாட்ஸ்அப் வாயிலாக ஆவடி உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் அளித்தார்.
அதில், 'ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ள 'அய்யா பவன் ரெஸ்டாரன்ட்டில்' ஆன்லைன் வாயிலாக உணவு ஆர்டர் செய்ததாகவும், உணவு மேற்கூறிய நேரத்தில் உணவை பரிமாற பிரித்து பார்த்தபோது, கெட்டு போய் இருப்பதாக' அதில் கூறியிருந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், சம்பந்தப்பட்ட உணவகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், அந்த உணவகத்திற்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதி ஆகி 4 மாதங்களுக்கும் மேலானது தெரிய வந்தது.
அதேபோல், அங்கு பரிமாற்றப்பட்ட சாதத்தை பரிசோதனை செய்தனர். அந்த உணவில் எந்த குறைபாடும் இல்லை எனவும், 'சில்வர் படலம்' எனப்படும் 'போய்ல்' கவரில் அடைத்து டெலிவரி செய்ததால் சாதம் கெட்டுப்போனதாக காட்சி அளித்ததும் தெரியவந்தது. மேலும், அதே உணவைத் தான் அங்குள்ள அனைவருக்கும் பரிமாறியதும் தெரிந்தது. இதையடுத்து, பெண் அளித்தப் புகாரில் உண்மையில்லை எனத் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ஆன்லைன் டெலிவரிக்கு உணவு எடுத்துச்செல்லும்போது, அவை தரமாக உள்ளதா என பரிசோதனை செய்த பின்பு, டெலிவரி செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது, உணவகத்தில் உணவு கையாளுபவர்களுக்கான உரிமம், நீர் சோதனை அறிக்கை, பூச்சிக் கட்டுப்பாடு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் உணவு பாதுகாப்பு விதி 55-ன் கீழ் உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:கர்நாடகாவில் கள்ளரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில்விட முயற்சி - 3 தமிழர்கள் கைது!