இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆவின் நிறுவனத்தின் சார்பில் கடந்த ஏழாம் தேதியன்று நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்லேட், மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாள்கள் கெட்டுப்போகாத பதப்படுத்தப்பட்ட பால் (பிளக்சி பேக்குகளில்), டீ மேட் என்ற புதிய வகை பால் என்ற ஐந்து வகையான புதிய பால் பொருள்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்துவைத்தார்.
இந்த ஐந்து புதிய பொருள்களும் நீண்ட நாள் கெட்டுப்போகாத அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால் பொருள்கள். இந்தப் பால் பொருள்களைக் குளிர்சாதன பெட்டியைத் தவிர்த்து அறை வெப்ப நிலையில் 90 நாள்கள்வரை கெட்டுப்போகாமல் இருக்கும் வகையில், பிளக்சி பேக்குகளில் ஆவின் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உண்மைகளைக் கருத்தில்கொள்ளாமல் பால் முகவர் சங்கத் தலைவர் பொன்னுசாமி ஆவின் நிர்வாகத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், பத்திரிகை மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதனை ஆவின் நிர்வாகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் டீ மேட் பால் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டினை அவர் கூறியள்ளார். பால் வணிக நோக்குடன் சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் அதிகம் பயனடையும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் போல விற்பனை கமிஷன் ரூ.5 தரப்படுகிறது. இது தனியார் நிறுவனங்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பொருள்கள் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் இதேபோன்று புதிய பொருள்களை அறிமுகப்படுத்த முன்வந்துள்ளன.