சென்னை புளியந்தோப்பு கே.பி. பூங்கா பகுதியிலுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள 1,400 படுக்கை வசதி கொண்ட கரோனா சிறப்புப் பிரிவை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் வழங்கிய பல்வேறு அறிவுரைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
திரு.வி.க. மண்டலத்தில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் கரோனாவில் தாக்கம் குறைந்துள்ளது. வீடுகளில் தனிமையில் உள்ளவர்களுக்கு தேவையான அனைத்தும் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு, மாநராட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
குறைசொல்வது, குழப்புவது, அதற்கு காரணம் கற்பிப்பது எளிது. ஆனால், தற்போது கரோனா ஏற்படுத்திவரும் சவால்களை வெல்ல ஊக்கம் தரவேண்டும். களத்தில் பணியாற்றி வருபவர்களை ஊக்குவிப்பதுதான் தற்போது அவசியமான ஒன்று. மக்களைக் காப்பாற்றுவதில், முதலமைச்சர் ராணுவ வீரரைப் போல் களத்தில் நின்று பணியாற்றி வருகிறார்.
30ஆம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை முறையாக பின்பற்றாத மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை ஏற்படும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊரடங்கை முறையாக நடைமுறைப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சாத்தாங்குளத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. உண்மை வெளிவரும்போது தவறு செய்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
இதையும் படிங்க:சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 61லிருந்து 90 ஆக அதிகரிப்பு!