சென்னை:சென்னையில் 16 வயது மகளுடன் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். அதேநேரம் அவரது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டபோது, சிறுமியை அவருடைய சித்தப்பா வீட்டில் தங்க வைத்துள்ளனர்.
அப்போது சித்தப்பாவின் மகன், சிறுமியிடம் பழகி செல்போனில் பப்ஜி விளையாட்டை பதிவிறக்கம் செய்து கொடுத்து, அதில் விளையாட சொல்லிக் கொடுத்துள்ளார். மேலும் அது மூலமாக ரகசியமாக சாட்டிங்கும் செய்து வந்துள்ளார். அப்போது பப்ஜி விளையாட்டில் சிறுமி மூழ்கியதால், அதைப் பயன்படுத்திய அவர், அந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் சிறுமியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்தும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் சிறுமியின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி உள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி, தாயிடம் கூறினால் கண்டிப்பார்கள் என்ற பயத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்த நபரிடம் கெஞ்சியுள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இளைஞர், தொடர்ச்சியாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் தான் பாலியல் தொந்தரவு செய்வதை பெற்றோரிடம் தெரிவித்தால், உன் மீதும், உன் தாய் மீதும் ஆசிட் அடித்து விடுவேன் என மிரட்டி, சிறுமிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
தொடர்ந்து தான் பாலியல் தொந்தரவு கொடுப்பதை யாரும் அறிந்து விடக்கூடாது என்பதற்காக பள்ளிக்கூடம் செல்லக்கூடாது எனவும், எந்த உறவினரிடமும் பேசக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சிறுமியை மிரட்டி வைத்திருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்தது, அவருடைய தாய்க்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பின்னர் இது தொடர்பாக விசாரணை செய்தபோது சிறுமி எந்த விதமான பதிலும் கூறாமல் இருந்துள்ளார். எனவே சிறுமியின் தாய், தனது தோழியிடம் உதவி கேட்டுள்ளார். அவர் சிறுமியை தனியாக அழைத்து விசாரணை செய்தபோது, சிறுமி நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதனையடுத்து முதல் முறையாக கடந்த 2021ஆம் ஆண்டு அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.