சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்பாக இந்திய அரசு அறிவித்ததுடன் உபா சட்டத்தின்கீழ் இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு ஐந்தாண்டுகள் தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களுக்குச்சீல் வைக்க இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சென்னை மேற்கு தாம்பரம் வ.உ.சி தெருவில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வந்தது.
அந்த அலுவலகத்துக்குச்சீல் வைக்க தாம்பரம் தாசில்தார் கவிதா தலைமையில் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டிற்கு வந்தனர்.
அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டின் முதல் தளத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது, ஏற்கெனவே அலுவலகம் நடத்தியவர்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு காலி செய்துவிட்டுச்சென்றது தெரியவந்தது. அந்த வீட்டில் வேறுகுடும்பத்தினர் வாடகைக்கு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், அந்த வீட்டில் வாடகைக்கு வரும்பொழுது போடப்பட்ட ஒப்பந்த பத்திரம் மற்றும் வீட்டைக்காலி செய்யும் பொழுது எழுதிக்கொடுத்த ஒப்பந்த பத்திரங்களை ஆய்வு செய்து அதன் பிறகு அங்கிருந்து போலீசார் சென்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு சீல் திடீரென மேற்கு தாம்பரம் வ.உ.சி தெருவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:அண்ணாமலையிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும்; அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி