தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 2, 2023, 5:08 PM IST

Updated : Jun 2, 2023, 5:24 PM IST

ETV Bharat / state

ஆசிரியர்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேச்சு.. தமிழக ஆசிரியர் கூட்டணி வேதனை!

ஆசிரியர்கள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறிய கருத்து வேதனை அளிப்பதாக, தமிழக ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. அமைச்சர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

Minister Ponmudi
அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் ஐம்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கல்வி வளர்வது ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது என்றும், மாணவர்களுக்கு கற்பிப்பது ஆசிரியர்கள் தான் எனவும் கூறினார். ஒரு காலத்தில் வாத்தியார் என்றால் பிரம்பு எடுத்து அடிப்பார்கள் என குறிப்பிட்ட அவர், ஆனால் இப்போது வாத்தியார்களை பிரம்பு எடுத்து அடிக்கிற அளவுக்கு மாணவர்கள் மாறியிருக்கிறார்கள் என்றார். இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு தான் ஆசிரியர்கள் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் பொன்முடி பேசினார்.

இந்நிலையில் ஆசிரியர்கள் குறித்து அமைச்சர் பொன்முடியின் கருத்து, வேதனை அளிப்பதாக தமிழக ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேராசிரியராக பணியாற்றிய போது (1985-88) ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளராக இருந்து சிறை தியாகம் செய்தவர் பொன்முடி. அவருடைய பேச்சாற்றலைக் கண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்தார்.

ஆனால் மாணவர்கள் பிரம்பை எடுத்து அடித்தால், அதை அட்ஜஸ்ட் செய்து கொண்டு அதற்கான வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற அவரது பேச்சை கேட்டு, இப்படிப்பட்ட உயர்கல்வித் துறை அமைச்சரை பெற்றிருக்கக் கூடியது தமிழ்நாட்டின் சாபக்கேடு, வெட்கக்கேடு என்ற விமர்சனத்தை கேட்ட போது எங்கள் நெஞ்சம் பதறுகிறது.

மகளிர்க்கு நகரப் பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்யும் உரிமையினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். மகளிர் மத்தியில் அந்தத் திட்டம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. ஆனால் ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, அதை சாதனையாக விளக்கிக் கூறாமல், கேலியும் கிண்டலுமாக மகளிர் கூட்டத்தைப் பார்த்து 'பஸ்ல ஓசில தான வந்தீங்க!..' என்று ஒருமுறை சொல்லிவிட்டு, பெண்களைப் பார்த்து ஓசி... ஓசி என்று பலமுறை குறிப்பிட்டார். இதற்கு பெண்கள் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். சாதனை போய் பெண்கள் மத்தியில் வாக்கு வங்கிக்கு ஒரு சோதனையினை ஏற்படுத்திவிட்டார்.

இன்னொரு முறை சுற்றுப்பயணத்தில் மக்கள் அமைச்சரை பார்த்து குறைகளை கேட்டபோது 'நீங்கள் என்ன ஓட்டு போட்டு கிழிச்சிங்களா?..' என்று கேட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் வாக்களிக்காதவர்களுக்கும் நான்தான் முதலமைச்சர் என்று பெருமிதமாக சொல்லி வருகிறார். ஆனால் அமைச்சரின் பேச்சு மீதான அதிருப்தி மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

முதலமைச்சரின் துணைவியார் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போதுபேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "மனைவி அமைவதெல்லாம் வரம். முதல்வர் அரசியலுக்கும் ஆலோசனை சொல்லும் திறமைமிக்கவர்" என்றார். இது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதற்கு ஒரு ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது.

ஒரு காலத்தில் அமைச்சர் பொன்முடி நாவில் நர்த்தனமாடிய ஆற்றல்மிக்க மேடைப்பேச்சு தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது. சேதாரம் அவருக்கல்ல; ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அமைச்சர் பொன்முடி தான் என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பற்றாக்குறை - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் என்ன?

Last Updated : Jun 2, 2023, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details