சென்னை: துறைமுகம் மற்றும் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை, நீர்வள மேலாண்மைத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது சென்னை மண்டலம் ஐந்தில் உள்ள அலுவலர்களுக்கு ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர் எ.வ.வேலு, பருவமழை தொடங்குவதற்கு முன்னர் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ''பருவமழைக்கு முன்னரே வடிகால்கள் மற்றும் இதர முன்னெச்சரிக்கை பணிகளை நெடுஞ்சாலைத்துறையின் புறநகர் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோரை அழைத்து சென்னையின் பணிகளில் ஈடுபடுத்துகிறோம்.
10 விழுக்காடு பணிகள் மீதமுள்ளன. ஆனால், அதனால்கூட பிரச்னை வரக்கூடாது என பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம். தொய்வு ஏற்படும் இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறோம். நீர் மேலாண்மைத்துறையின் பராமரிப்பில் உள்ள கால்வாய் பணிகளை துரிதமாக மேள்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.