சென்னை:அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான குற்றங்கள், ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைகள் நடைமுறையில் உள்ளது என்றாலும், அது யார் மீது போடப்படுகிறது? என்பதை பொறுத்து வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின் படி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையில் சிலருக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி பதவியை இழந்தவர்களும் உண்டு. அந்த வரிசையில்,
பாலாகிருஷ்ண ரெட்டி:கடந்த அதிமுக ஆட்சியில் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த பாலகிருஷ்ண ரெட்டி, 1998ஆம் ஆண்டு அவரது தொகுதியில் ஏற்பட்ட கலவரத்தின் போது அரசு பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக சிறப்பு நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டார். இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.
வை. கோபால்சாமி (வைகோ):தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவாக ராஜா முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோவுக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்கிறார்.
தற்போது, தமிழக அமைச்சர்களாக உள்ள செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், பொன்முடி, மற்றும் பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கு விசாரணையை நீதிமன்றம் தீவிரப்படுத்தி உள்ளது.
அமைச்சர் பொன்முடி:இதில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்குகளில் உயர் நீதிமன்ற கண்காணிப்பில், அமலாக்கத்துறை விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது 1996 முதல் 2001 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்தது.
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்காத உயர்நீதிமன்றம், எந்த ஆதாரங்களின் அடிப்படையில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார் என கேள்வி எழுப்பி தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இது அமைச்சர் பொன்முடிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Senthil Balaji : ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல்!
அமைச்சர் தங்கம் தென்னரசு :தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மீது 2006 முதல் 2010 வரையான காலகட்டத்தில் 76 லட்ச ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கை போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி ஶ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்தது.
சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காத உயர்நீதிமன்றம், அவசரகதியில் ஏன் வழக்கு ரத்து செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை ஏன் தொடர்ந்து விசாரணையை நடத்த விரும்பவில்லை என கூறி வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்:இதுபோல, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீது 2006 முதல் 2010 வரையான காலகட்டத்தில் 44 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி வழக்கை ஶ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காத உயர்நீதிமன்றம், அமைச்சர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரணை செய்ய தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
செந்தில் பாலாஜி:கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், வேலைக்கு பணம் கொடுத்தவர்களிடம் திரும்ப பணம் கொடுக்கப்பட்டதால் உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேலைக்காக பணம் வாங்கி இருந்தால் மட்டுமே திரும்ப கொடுக்க முடியும் என்பதால் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றது உறுதியாகிறது என தெரிவித்து உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து,விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது. தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஜாமீன் கிடைக்காது என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அமைச்சர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டதை ஏற்காத உயர்நீதிமன்றம் மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை ஆண்டியும், அமைச்சர்களும் ஒன்றுதான் என்பதை நீதிமன்றத்தின் செயல்பாடு பிரதிபலிப்பதையே காட்டுகிறது. இது, நீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது என்பதையே காட்டுகிறது.
ஆகஸ்ட் 24-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி," நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கான உரிமை உண்டு ஆனால் பழிவாங்கும் எண்ணத்தில் வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு" என கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: H.Raja : பெண்கள் மீதான அவதூறு கருத்து... எச்.ராஜா மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு!