தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ஆம் தேதி முதல் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவர்களின் போராட்டம் வலுத்து வரும் நிலையில், இன்று பணிக்கு வராத மருத்துவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நோட்டீஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
எச்சரிக்கை விடுக்கும் விஜயபாஸ்கர் இதனைத்தொடர்ந்து "பணிக்கு வராமல் பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது. நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க மறுக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதலமைச்சர் பழனிசாமி எச்சரித்தார்.
இந்நிலையில், அரசு மருத்துவர்களின் போராட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும். 16 ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறுவது தவறான தகவல். நேற்றுவரை 4,683 மருத்துவர்கள் மட்டுமே பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இன்று மதியம் வரை 1,550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். மூவாயிரத்து 127 பேர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும், இரண்டு மூன்று மணி நேரத்திற்குள் அரசு மருத்துவர் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் அனைத்து பணியிடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்டு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.