இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
உலகளவில் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவிய காலத்திலும் தமிழ்நாடு அரசு கரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பாதிப்பில்லாத பிற நோயாளிகளுக்கும், எவ்வித தங்கு தடையின்றி அவசரகால மருத்துவச் சேவைகள் உள்ளிட்ட, அனைத்து மருத்துவ சேவைகளும் 24 மணி நேரமும் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 11 வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 கோடியே 09 லட்சத்து 02 ஆயிரத்து 183 நபர்கள் புறநோயாளிகளாகவும், 27 லட்சத்து 30 ஆயிரத்து 864 நபர்கள் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நேற்று வரை (ஆக.11) ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 571 பிரசவங்களும் 68 ஆயிரத்து 479 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும், 126 ஒருங்கிணைந்த பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தை அவசர சிகிச்சை சேவை மையங்களில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 206 பிரசவங்களும் நடைபெற்றுள்ளன.