மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்று மருத்துவர் குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் உலக சுகாதார நிறுவனத்தின் சௌமியா சுவாமிநாதன் பங்கேற்று பேசும்போது, தமிழ்நாடு உலகளவில் கரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கையாண்டு கட்டுப்படுத்தியுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார். பிற நாடுகளில் இரண்டாவது, மூன்றாவது அலை வரும்போது தமிழ்நாட்டில் இறப்பையும் கட்டுப்படுத்தி உள்ளோம். மருத்துவக் கட்டமைப்பை உருவாக்குவது, தொற்றை கட்டுப்படுத்துவது போன்றவற்றில் முன்னோடியாக இருக்கிறது என பாராட்டினார்.
தமிழ்நாட்டில் கோவிஷீல்டு, கோவாக்சின் 12 லட்சத்து 34 ஆயிரத்து 920 டோஸ் வந்துள்ளது. இன்றுவரையில் 97 ஆயிரம் பேருக்கு போட்டுள்ளோம். ஆரம்பத்தில் சிறிய தயக்கம் இருந்ததால், தானும், சுகாதாரத்துறை செயலாளரும் போட்டுக்கொண்டோம். அதன்பின்னர் மருத்துவர்களும், செவிலியர்களும் போட வேண்டும்.
150 மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கக் கூடிய மருத்துவமனைகள் மண்டல சேமிப்பு கிடங்கிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். பெரிய தனியார் மருத்துவர்களும், சிறிய மருத்துவமனை பணியாளர்களும் அரசின் கரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.
சுகாதாரத் துறை முன்கள பணியாளர்களை தொடர்ந்து ஒன்றாம் தேதியில் இருந்து பிற துறையைச் சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. காவல் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை பணியாளர்களும் போட்டுக்கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து போடும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். 70 லட்சத்து 13 ஆயிரம் குழந்தைகளுக்கு 43 ஆயிரம் மையங்களில் போடப்பட உள்ளது. 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.