எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவு கலந்தாய்வில் முதல் பத்து இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதால் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே இன்று நடைபெற்ற கலந்தாய்வில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.
அரசு பள்ளி மாணவர்கள் தனியார் கல்லூரியில் இடங்களைத் தேர்வு செய்தால் அவர்களுக்கான கட்டணங்கள் முழுவதையும் அரசே வழங்கும் என முதலமைச்சர் 18ஆம் தேதி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் முறையை கூறினர்.
அதுமட்டுமில்லாமல் 18ஆம் தேதியே சுயநிதி கல்லூரிகளில் மாணவர்கள் கட்டணத்தை செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக சேர்க்கை நிறுத்தக்கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் கடிதம் அனுப்பியது. அரசு பள்ளி மாணவர்கள் சிலர் தங்களின் சூழ்நிலை காரணமாக இடங்களை தேர்வு செய்யாமல் விட்டுச்சென்றனர். சில மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர்.