சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான 47-வது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (ஜன.3) தொடங்கி, ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக் காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரையும் நடத்தப்படும்.
விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேருக்கு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரிலான 'பொற்கிழி விருதுடன்' தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. அதனுடன் பபாசி சார்பில் 'பதிப்பகச் செம்மல் விருது' உள்பட சிறப்பு விருதுகள் 9 பேருக்கு வழங்கப்பட்டது.
இவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்த்து கடிதத்தைப் படித்தார். அதில், "இந்த 47வது புத்தகக் காட்சி மிகப்பெரிய வெற்றி அடையவும், அதிக அளவிலான புத்தகங்கள் விற்பனையாகவும் நான் வாழ்த்துகிறேன்.
இன்னும் சில ஆண்டுகளில் 50வது ஆண்டு புத்தகக் காட்சி நடைபெறப் போகிறது. இது வாசிப்பின் மீதும், அறிவுத் தேடலின் மீதும் மற்றும் பகுத்தறிவாலும், முற்போக்குச் சிந்தனையுடனும் தமிழ் சமுதாயம் முன்னோக்கி நடைபோடுவதன் அடையாளம். புத்தகம் வெளியிடுவது, பதிப்பிப்பது, விற்பனை செய்வது பிற தொழில்களைப் போன்றது அல்ல. அது அறிவுத்தொண்டு. தமிழ் ஆட்சியும், தமிழர்களின் ஆட்சியும் நடைபெறும் நம்முடைய தமிழ்நாட்டில் இத்தகைய அறிவுத் திருவிழாக்கள், தமிழ்த் திருவிழாக்கள் அதிகம் நடக்க வேண்டும்" என அவர் படித்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
47வது புத்தக்காட்சி: மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10 சதவீத சலுகைகள் வழங்கப்படுகிறது. பபாசியில் உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த 150க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இந்தாண்டு தலா ஒரு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை, வாய்ஸ் ஆஃப் புத்தா, எழுச்சி பதிப்பகம், தடாகம், திருநங்கை பிரஸ் LLP ஆகிய சிறப்பு வாய்ந்த அமைப்புகளுக்கும் அரங்கு அமைக்கின்றார்கள். பூவுலகின் நண்பர்கள், காக்கைக்கூடு, இயல்வாகை போன்ற சூழலியல் சார்ந்த அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, அவர்களின் உழைப்பினால் உருவாக்கப்பட்ட சிறப்புத்தன்மை வாய்ந்த கைத்திறன் பொருட்களை உலகம் முழுவதிலிருந்தும் புத்தகக் காட்சிக்கு வருகை தரக்கூடிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் பூம்புகார் சார்பில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்களின் வளர்ச்சிக் கழகம் 2 ஆயிரம் சதுர அடியில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென, இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நேஷனல் புக்டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தொல்லியல்துறை ஆகிய நிறுவனங்களும், இந்த புத்தகக் காட்சியில் கலந்துகொள்கிறார்கள். இந்த நிறுவனங்களுடன் இல்லம் தேடி கல்வி இயக்கமும் பங்கெடுக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜன.9 முதல் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு!