சென்னை:திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று(மார்ச்.5) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இளைஞர் அணி செயலாளராக கழக நிகழ்ச்சிகளிலும், அமைச்சராக அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யும் போது, நீங்கள் அளிக்கும் வரவேற்பைக் கண்டு நெகிழ்கிறேன். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், காட்டும் அன்பும் என்னை இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கிறது.
அதேவேளையில் அன்பை வெளிப்படுத்துவதற்கான வழியாக என்னை வரவேற்று ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது, பட்டாசு வெடிப்பது, வெள்ளிச் செங்கோல்-வாள் போன்றவற்றை நினைவுப் பரிசாக வழங்குவது, மாலை அணிவிப்பது, பொன்னாடை போர்த்துவது போன்ற நடைமுறை தொடர்கிறது. இவற்றைத் தவிர்க்கும்படி பல முறை கேட்டுக்கொண்ட பிறகும், இவை தொடர்வது வருத்தமளிக்கிறது.
திமுக தலைவர் அறிவுரைப்படி, புத்தகங்களை வழங்குங்கள் எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படி நீங்கள் எனக்கு அளிக்கும் புத்தகங்களைத் தேவைப்படும் பள்ளி-கல்லூரிகளின் நூலகங்களுக்கு வழங்குகிறோம். திமுக தலைவரின் 70-வது பிறந்தநாளையொட்டி என்னுடைய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நான் முன்னெடுத்துள்ள நடமாடும் கலைஞர் நூலகத்தில் உள்ள 4 ஆயிரம் புத்தகங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் புத்தகங்கள் நீங்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கியவை.
மேலும், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு வழங்கும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை வழங்குங்கள் என்று நான் கேட்டுக்கொண்டபடி, நீங்கள் வழங்கிய அந்தப் பொருட்களை சென்னையைச் சுற்றியுள்ள பல ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளித்து மகிழ்ந்தேன்.
அதேபோல், பலரும் என்னிடம் இளைஞர் அணி அறக்கட்டளைக்கு நிதியுதவிகளை வழங்குகிறார்கள். அத்தொகையிலிருந்து பாரபட்சம் பார்க்காமல், சமூக வலைத்தளங்கள் மூலமாக மருத்துவம், கல்வி போன்ற உதவிகளைத் தேவையுள்ள ஏழை-எளிய மக்களுக்கு வழங்கி வருகிறோம்.