சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல்பாடுகள் குறித்து அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அதில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பெ.அமுதாவால் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் செயல்படும் சுய உதவிக் குழுக்களையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும்.
சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பாக ரூ.25,000 கோடி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து அடைந்திட வேண்டும். தர மதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கிட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் அடைந்துள்ள இலக்குகளை விரைந்து அடைந்திட வேண்டும்.
சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்திடும் நடவடிக்கையில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். திட்டத்தின் செயல்பாடுகளை சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடித்திட அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
நலிவுற்றோர், முதியோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் ஆகியோர்களை உள்ளடக்கிய சுய உதவிக் குழுக்களை அமைத்திட அதிக அக்கறை காட்டிட வேண்டும். வங்கிக் கடன் இணைப்பு பெற்றுத் தரும் நடவடிக்கையில் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும்” என ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்புச் செயலாளர் எம். கருணாகரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயலாக்க அலுவலர் ச.திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் பா.பிரியங்கா பங்கஜம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை இயக்க அலுவலர் எம். அருணா மற்றும் கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உண்மை ஒரு நாள் மேலோங்கி நிற்கும் - சாதி பிரச்னைகள் குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு