சென்னை:ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கட்சி பாகுபாடின்றி தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க வருமாறு அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு, திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
நீட் தேர்வில் (NEET Exemption Bill) இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி திமுக சார்பில் 'கையெழுத்து இயக்கம்' இன்று (அக். 21) தொடங்கியது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்தையிட்டார்.
50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் மாணவர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலதரப்பினரிடம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி, "இன்று 'நீட் விலக்கு நமது இலக்கு' என்ற பெயரில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நாம் தொடங்கி இருக்கிறோம்.
கடந்த 3 நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. கண்ணில் சிறிய இன்ஃபெக்ஷன். 4 நாட்கள் வரை எங்கேயும் செல்ல வேண்டாம், நன்றாக ஓய்வெடுங்கள் என மருத்துவர்கள் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள். ஆனால், ஏற்கனவே நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்க நிகழ்வு முடிவாகிவிட்டதால், கண்டிப்பாக நான் கலந்து கொள்ள வேண்டும் என இதில் பங்கேற்றுள்ளேன்.
எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் யாரும் நீட் தேர்வு எழுதவில்லை. திமுக நடத்தும் இந்த நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை நாம் மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலம் நீட் தேர்வை நாம் ஒழிக்க வேண்டும். நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்படும் பாதிப்பை மத்திய அரசு புரிந்துகொள்ள மறுப்பதால் நீட் மசோதா கடந்த 21 மாதங்களாக குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது .
இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும்படி, பலமுறை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவருக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு வந்தால் நல்ல தரமான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்று கூறிய மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது.