சென்னை:வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில், சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்திற்கு கருத்துக்கணிப்பு இன்று (செப்.18) துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் அமைச்சர் உதயநிதி அங்கிருந்த பொதுமக்களிடம் கருத்து கணிப்புக்கான துண்டு பிரச்சாரம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி கூறுகையில், “மக்களின் பயண நேரத்தையும், செலவையும் குறைக்கும் விதமாகவும் மற்றும் வேகமான பொது போக்குவரத்தை வடிவமைக்கவும், பாதுகாப்பான சாலைகளை வடிவமைக்கவும், பொது மக்களின் பயண முறை மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்துக் கொள்ளவும், சிறந்த போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கவும் மற்றும் அனைவருக்கும் ஏற்ற போக்குவரத்தை திட்டமிடவும் இக்கருத்துக்கணிப்பு உதவியாக இருக்கும்.
மேலும் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலமாக காட்சிகளை பதிவு செய்து, அதன் மூலம் கருத்துக்கணிப்பையும் மேற்கொள்கிறார்கள். எனவே, அடுத்து வரும் 25 ஆண்டு கால சென்னையின் பொது போக்குவரத்தை திட்டமிட, இந்த கருத்துக்கணிப்பு நடைபெற உள்ளது” என தெரிவித்தார்.